சென்னை மாநிலத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டவேண்டும் என்னும்நியாயமான ஆர்வம் கொண்டிருந்தார் விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார். தம்கோரிக்கை நிறைவேற்றப்படாதது கண்டு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அவர் உடல் மெலிந்து, எடை குறைந்து, உண்ணாவிரதம் இருந்தபொழுது, அவரைக்கான அண்ணாவும் ராசாராமும் சென்றார்கள்.
அண்ணா வந்திருப்பதைக் கண்டு முகமலர்ச்சியோடு பேசினார் சங்கரலிங்கனார்.
அப்பொழுது தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த காங்கிரஸ்காரர்கள் தம்கோரிக்கையைப் பொருட்படுத்தவில்லையே என்ற ஏக்க உணர்ச்சியோடுகாணப்பட்டார்.
அவர் அண்ணாவிடம் மனம் திறந்து பேசினார்.
"நீங்களாவது என் ஆசையை நிறைவேற்றுங்கள்" என்று தெரிவித்தார்.
அண்ணா பெருந்தன்மையோடு அவரது கோரிக்கையைக் கேட்டுக் கொண்டார்.அதில் அக்கறை செலுத்துவதாகக் கூறினார்.
பிறகு, விருதுநகரிலிருந்து சென்னைக்குத் திரும்பிய அண்ணாவிடம் ராசாராம், "சங்கரலிங்கனார் இருக்கும் நிலைமையைப் பார்த்தால், அதிக நாட்கள்உயிரோடு இருக்கமாட்டார் என்று தோன்றுகிறது. காங்கிரஸ் தியாகி ஒருவரைகாங்கிரஸ்காரர்கள் இப்படிக் கவனிக்காமல் விட்டுவிட்டார்களே" என்றார்.
அதற்கு அண்ணா "பெரியவர்களைப் பற்றி நாம் எதுவும் முடிவுசொல்லிவிடக்கூடாது. உயிரோடு இருக்கும் அந்த விருதுநகர் தியாகியைப்பற்றி அப்படியெல்லாம் சொல்லாதே! தம் ஆசையை யாரிடமாவது மனம்திறந்து கூற நம்பிக்கையோடு இதுநாள் வரை காத்திருக்கிறார். என்னைக்கண்டவுடன் சொல்லி அனுப்பிவிட்டார்" என்றார்.
(78 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனார் தம் கோரிக்கைநிறைவேறாமலேயே அவர் மனம் உடைந்து மரணம் அடைய நேரிட்டது.)
காங்கிரஸ் தியாகி ஒருவரின் கோரிக்கையை, காங்கிரஸ் ஆட்சிநிறைவேற்றாமல், உண்ணாவிரதம் இருந்தவரை உயிர் இழக்கச் செய்தது.
பாவேந்தர் பாரதிதாசனுக்கு நிதி திரட்டுவதற்காக கோகலே மண்டபத்தில்சர்வகட்சி கூட்டம் ஒன்றை முல்லை முத்தையாவும் புதுமைப்பித்தனும்ஏற்பாடு செய்திருந்தனர்.
அக்கூட்டத்தில் அறிஞர்கள் பலர் பேசினார்கள். அப்பொழுது "லிபரேட்டர்"ஆங்கில தின இதழ் ஆசிரியர் டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி ஆங்கிலத்தில்பேசும்பொழுது "பாரதிதாசன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து,அயல் நாடுகளில் பரவச் செய்யவேண்டும்" என்று குறிப்பிட்டார்.
அடுத்து பேசிய அண்ணா அவர்கள், "டாக்டர் கூறுவதை நான் ஏற்கிறேன். அந்தக்காரியத்தை அவரே செய்யலாமே. ஆனால், அவருக்கும் நமக்கும் மத்தியில்ஒரு கோடுதான் குறுக்கே நிற்கிறது" என்று குறிப்பிட்டார்.
(டாக்டர் கிருஷ்ணசாமி நெற்றியில் சிவப்பு நாமம் ஒன்றை எப்பொழுதும் தீட்டிக்கொண்டிருப்பார். மேலும் கொள்கை வேறுபாடு உள்ளவர். அதை அவ்வாறுகுறிப்பிட்டார் அண்ணா.)
ஏழை மக்களின் பசியைப் போக்குவதற்காக, ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கி,மக்களின் மனதில் நல்லெண்ணத்தைப் புகுத்த வேண்டியிருந்தது. அதோடுகுறைந்த விலையில் அரிசி வழங்கவும் தீவிரமாகத் திட்டம் தீட்டியிருந்தார்அண்ணா. அதனால், சிலருடைய ஏச்சையும் பேச்சையும் கேட்கவேண்டியிருந்தது. குறிப்பாக அதுவரை ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரசார்புது ஆட்சியாளரான தி.மு.க.வினரை ஏதாவது கிண்டல் செய்யவேண்டும் என்றுகருதி, படி அரிசித் திட்டத்தைக் கேலி செய்து வந்தனர்.
இதை அறிந்த அண்ணா,"கழுநீர்ப்பானையைத் தலையில் சுமந்து செல்பவள்,பன்னீர்ச் செம்பினை எடுத்துச் செல்பவளைக் கண்டு,'பூ' இந்தச் செம்புதானாஉனக்குக் கிடைத்தது. என் தலையில் பார். எத்தனை பெரிய பானை: என்றுகூறுவதுபோல் இருக்கிறது காங்கிரஸ்காரர்கள் நம்முடைய படி அரிசித்திட்டத்தைக் கேலி செய்வது" என்றார்.
ஈரோட்டில் டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகம் நடந்து கொண்டிருந்த சமயம்.அந்த நாடகக் குழுவில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் ஒரு நடிகராக இருந்தார்.
அதே அரங்கில், அண்ணா நடிக்கும் நாடகம் ஒன்றும் அன்று நடைபெறஇருந்தது.
நாடகம் தொடங்கும் முன், நடிகர்கள் மேக்கப் போட்டுக்கொள்ளமுற்பட்டனர்.மேக்கப் அறைக்குள் கண்ணாடியின்முன் அமர்ந்திருந்தஒருவரைக் காட்டி,"இவருக்கு மேக்கப் போடு" என்று ராஜேந்திரனிடம்சொன்னார்கள்.
ராஜேந்திரன், அரைகுறை மனதுடன் அந்த ஆளுக்கு மேக்கப் போடலானர். "இதுஎன்ன முகத்தை இப்படி வைத்துக் கொண்டால் எப்படி மேக்கப் போடுவது? இப்படி திரும்பு, மேலே பார்; அப்படி திரும்பு" என்று அதட்டினார் ராஜேந்திரன்.
மேக்கப் போட்டுக்கொள்ள உட்கார்ந்திருந்தவர் எதுவும் பேசாமல், ராஜேந்திரன்சொன்னபடியெல்லாம் செய்தார். பிறகு சிறிது நேரம் கழித்து, "இன்று என்னவிசேடம்? ஏன் இவ்வளவு அவசரப்படுகிறாய்?" என்று கேட்டார் மேக்கப்போட்டுக்கொள்ள வந்தவர்.
"அண்ணா நடிக்கப் போகிறார். முதலிலிருந்து அவர் நடிப்பதைப் பார்க்கவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு மேக்கப்போடுவதற்குள் விடிந்துவிடும் போல் இருக்கிறதே; இனி நானாவது, நாடகம்பார்ப்பதாவது? இப்பொழுது நாடகத்தை ஆரம்பித்து இருப்பார்களே" என்றுமிகவும் சலிப்போடு சொன்னார் ராஜேந்திரன்.
"கவலைப்படாதே! அண்ணா இன்னும் மேடைக்கே போகவில்லை" என்றார்மேக்கப் போட்டுக்கொண்டிருந்தவர்.
"உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றார் ராஜேந்திரன்.
"அவர்தான் உன்னிடம் மாட்டிக்கொண்டு ஒரு மணி நேரமாக அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்! அவர் எப்படி மேடைக்குப் போக முடியும்?" என்றார் மேக்கப்போட்டுக்கொண்டிருந்த அண்ணா.
ஒருமுறை அண்ணா அவர்கள் காங்கிரஸ் கட்சியைப் பற்றி கீழ்கண்டவாறுபேசினார்.
"காங்கிரஸ் கட்சி ஒரு முருங்கை மரம். அதில் தியாகிகள் என்னும் முருங்கைக்கீரையையும், முருங்கைக் காயையும் பறித்து, குழம்பு வைத்துதுவட்டியாகிவிட்டது. இப்போது, அங்கு கம்பளிப் பூச்சிகள் இருக்கின்றன.மரத்தில் இருக்கிறதே என்பதற்காக அதையுமா பிடித்து கறி சமைப்பார்கள்."
இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தீவிரமாய் இருந்த காலம்.
காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் ராஜாஜி தலைமையில் 1938-39 இல்சென்னையில் மாகாண சுயாட்சி நடைப்பெற்றது.
அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி, இந்தியைக் கட்டாயப் பாடமாகப்புகுத்தினார்.
அதை எதிர்த்து, பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமையில், தமிழர்கள்போராட்டம் தீவிரமாகப் கிளர்ந்து எழுந்தது.
அண்ணா அவர்கள் இந்தியை எதிர்த்து, ஒரு கூட்டத்தில் தமிழ்த்தாய்க்கு இந்திஇடையூறாக முடியும் என்பதாகக் குறிப்பிட்டார்.
அந்தக் கூட்டத்தில் ஒரு காங்கிரஸ்காரர் எழுந்து, அண்ணாவை நோக்கி"நீங்கள்தான் சுயமரியாதைக் காரர்கள் ஆயிற்றே, உங்கள் தமிழ்த்தாய் எங்கேஇருக்கிறாள்?" என்று கேட்டார்.
உடனே,"உங்கள் பாரதத் தாய் வீட்டிற்கு பக்கத்து வீட்டில்தான் எங்கள்தமிழ்த்தாய் வீற்றிருக்கிறாள்!" என்று சுடச்சுட பதில் அளித்தார் அண்ணா.
(காங்கிரஸ்காரர்கள் இந்தியாவை "பாரத மாதா","பாரதத்தாய்" என்று கூறுவதுஅக்காலத்திய வழக்கம்)